2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
நாளை மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.