ரயில்வே பட்ஜெட்: மகளிருக்கான ரயில் பெட்டிகளில் பெண் காவலர்களுக்கு செல்போன்

செவ்வாய், 8 ஜூலை 2014 (13:08 IST)
மகளிருக்கான ரயில் பெட்டிகளில் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர் கழிவறை வசதிகள் மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நடைமேடை டிக்கெட்களை இணையத்தின் மூலம் பெற வசதிகள் ஏற்படுத்தப்படும். முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கு இணையத்தின் முலம் டிக்கெட்கள் பெற வசதி செய்யப்படும்.

ரயில்வே பாதுக்காப்புக்கு புதிதாக 4 ஆயிரம் பெண்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மும்பை அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில், முக்கிய நகரங்களுக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வைக்கப்படும்.

இந்திய ரயில்வேயில் தற்போது 5,400 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. அவை அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டு மாற்றுப் பாதைகள் அமைத்துத் தரப்படும். அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உணவு கூடங்கள் அமைத்துத் தரப்படும்.

ரயில்களில் உணவு குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத் தடுக்க மிகவும் பிரபலமான சமைத்து தயாராக இருக்கும் உணவுகள் ரயிலில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் ரயில்வே அமைச்சர்.

வெப்துனியாவைப் படிக்கவும்