கிட்னி மோசடி வழக்கு 5 மருத்துவர்கள் சிறையில் அடைப்பு
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (11:08 IST)
சிறுநீரக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 மருத்துவர்களை, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிறுநீரகங்களை திருடி மோசடி செய்ததாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி உட்பட 5 மருத்துவர்கள், கடந்த வாரம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சட்ட விரோத சிறுநீரக மாற்று செய்யப்பட்டு இருப்பது உட்பட பல்வேறு மோசடிகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கைதான மருத்துவர்களில் வீனா ஸ்வேலிக்கர், சுவின் ஷெட்டி இருவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் வெள்ளியன்று அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், 5 மருத்துவர்களும் மும்பையில் உள்ள டிண்டோஷி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி காஜாபரூக் அஹமது உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.