தொழிலாளர் வைப்பு நிதிக்கு விதிக்கப்பட்ட வரி வாபஸ்: மத்திய அரசு முடிவு
புதன், 2 மார்ச் 2016 (07:45 IST)
தொழிலாளர் வைப்பு நிதி தொகைக்கு விதிக்கப்பட்ட வட்டி மீதான வரியை தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) குறித்து குற்பிடுகையில். "பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர் ஒருவர் இந்த நிதியில் இருந்து பணத்தை எடுக்கும்போது 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும், மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வரி விதிப்பு உண்டு, இது வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்று கூறப்பட்டிருந்தது.
இது தொழிலாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அந்த வரி குறித்து தொழிற்சங்கங்கள் தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதைத் தொடர்ந்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தொழிலாளர் எடுக்கும் தொகை பற்றி விளக்கம் அளித்தார்.
இது குறித்து ஹாஸ்முக் அதியா கூறுகையில், "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை (இபிஎப்) ஓய்வுக்கு பின்பு திரும்பப்பெறும்போது முழுவதற்கும் வரி வசூலிக்கப்படமாட்டாது.
இந்த வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் 60 சதவீத பங்களிப்புக்கான வட்டித்தொகை மீது மட்டுமே வரி விதிக்கப்படும். அதுவும் இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்தான் நடைமுறைக்கு வரும்.
மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு இந்த வரிவிதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதே நேரம் பொது வைப்பு நிதியில் (பிபிஎப்) இருந்து எடுக்கப்படும் பணத்தை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்கும்.
இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 40 சதவீத தொகைக்கு மட்டும் அல்ல, 100 சதவீத தொகையுமே வரி விலக்கிற்கு உட்பட்டதுதான். என்று ஹாஸ்முக் அதியா கூறினார்.
இந்நிலையில், தொழிலாளர் பொது வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும்போது வட்டிக்கு வரிப் பிடித்தம் செய்வதற்கு பாஜக தொழிற்சங்கமான பிஎம்எஸ் உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 60 சதவீத பணத்தை எடுக்கும்போது, அதன் மீதான வட்டிக்கு விதிக்கப்பட்ட வரியை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.