கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. ஆறு மாதங்களாக முழு ஊரடங்கு உத்தரவு இருந்ததால் கோடிக்கணக்கான மக்கள் சிரமம் அடைந்தனர் என்பதும், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் இருக்கின்ற இடத்தில் வேலை வாய்ப்பு வருமானம் இல்லாமலும் தவித்தனர்
இந்த நிலையில் திடீரென மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நேற்று முதல் அதாவது டிசம்பர் 22 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது
ஐடி உள்ளிட்ட இரவு நேர ஊழியர்களுக்கு இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மும்பையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமல் செய்யப்பட்ட இரவு நேர ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது