நேபாள பசுபதிநாத் கோவிலுக்கு 2500 கிலோ சந்தனக் கட்டைகள்: மோடி நன்கொடை

திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (19:57 IST)
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்குப் பிரதமர் மோடி 2500 கிலோ சந்தனக் கட்டைகளை நன்கொடையாக அளித்தார். மேலும், தனது பிரார்த்தனைகளை இந்தக் கோவிலில் அவர் முன்வைத்தார்.
 
இந்து மத நாள்காட்டியின்படி, ஷ்ரவன் மாதத்தின் இந்தத் திங்கள் கிழமை (ஆகஸ்ட் 04, 2014) விசேஷமாகக் கருதப்படுகிறது. 
 
பிரதமரைப் பாரம்பரிய இசைக் கருவிகளுடன் வரவேற்றனர். பள்ளிக் குழந்தைகள் வேத மந்திரங்களை ஓதினர். 45 நிமிடங்களுக்குப் பிரதமர் கோவிலில் தனது பிராத்தனைகளை முன்வைத்தார். அப்பொழுது, மகா பூஜா என்ற சிறப்புப் பிராத்தனை நடத்தப்பட்டது. கோவில் அதிகாரிகள் பிரதமருக்கு கோவிலின் சிறிய மாதிரியைப் பரிசாக அளித்தனர்.
 
பார்வையாளர்களின் புத்தகத்தில், பசுபதிநாத் கோவிலும், வாரநாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலும் ஒரே மாதிரியாக இருப்பதாக பிரதமர் தனது கருத்தினைப் பதிவு செய்தார்.
 
பிறகு, கோவிலைச் சுற்றிக் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களுக்குப் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்