கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள். எனினும் சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்த பயணம் குறித்து மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் லடாக் சென்றடைந்த பிறகே இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் இந்த திடீர் ஆய்வு பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. லடாக்கில் லே பகுதியில் உள்ள நிமு என்ற இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் பிரதமர். பிறகு காயமடைந்த ராணுவ வீரர்களை நலம் விசாரித்த பிறகு பிற்பகலில் டெல்லி திரும்பி முக்கிய ஆலோசனைகள் செய்ய உள்ளதாய் கூறப்படுகிறது. இதனால் இன்றோ அல்லது நாளையோ சீனாவுடனான மோதல் குறித்தும், நடவடிக்கை குறித்தும் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.