நிலவில் தரையிறங்கும் சந்திராயன் 2: பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி

வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (23:14 IST)
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் இன்னும் சிலமணி நேரத்தில் சந்திரனில் தரையிறங்க இருப்பதால் அந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை நேரில்  பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வந்தார். அவரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரவேற்றார்.
 
முதல்வர் எடியூரப்பாவின் வரவேற்பை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி அதன்பின்னர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அங்கு மாணவர்களுடன் அமர்ந்து இன்று இரவு நிலவில் சந்திரயான் 2 விண்கலம் இறங்குவதை பார்வையிடுகிறார்.
 
சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சந்திரனின் தென்துருவ பகுதியில் தரையிறங்கவுள்ளது. அதன்பின்னர் அதில் உள்ள ரோவர் சில மணி நேரங்களில் நிலவில் மண்ணில் இறங்கும். இதுவரை உலகின் எந்த நாட்டின் விண்கலமும் செய்யாத சாதனையை இந்திய விண்கலம் ஒன்று செய்யவிருப்பதை அடுத்து இந்த நிகழ்வு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சந்திராயன் 2, சந்திரனின் இறங்கும் நிகழ்வை காண இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் நேரடியாக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். சந்திரனின் தென் துருவத்தில் உள்ள பல மர்மங்களை சந்திராயன் 2 படம் பிடித்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்