இந்தியா-சீனா விவகாரம்: அனைத்துகட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

புதன், 17 ஜூன் 2020 (13:46 IST)
நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், நான்கு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்பதுமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் சீன தரப்பில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு நாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் சீன எல்லையில் நடந்த மோதல் குறித்தும் அதன் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் சீனாவின் தாக்குதலுக்கு எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்