திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இயக்குனர் ஒருவர், ஒரு வருடமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக நடிகை சௌமியா வேதனையுடன் கூறியுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர். நடிகைகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக,பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மலையாள சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சௌமியா, திரைப்பட இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கல்லூரி படித்த காலகட்டத்தில் தான் வந்தது என்றும் அந்த சமயம் இயக்குனர் ஒருவர் என்னுடைய பெற்றோர்களை சந்தித்து பேசி என்னை படத்தில் நடிக்க அணுகினார் என்றும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் படத்தில் நடிக்க சென்ற என்னை, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி உள்ளார். அவருடைய படத்தில் நடிப்பதால் கிட்டத்தட்ட நான் ஒரு வருடங்களாக அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு முறை அவருடைய மனைவி வீட்டில் இல்லாத போது நான் அவருடைய மகள் மாதிரி என கூறி என்னிடம் அவதூறான செயல்களை செய்ய முயற்சி செய்தார் என்றும் வெளியே சொல்ல ரொம்ப பயமாக இருந்த காரணத்தால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அவரிடம் நடிக்கவும் செய்தேன் என்றும் நடிகை சௌமியா தெரிவித்துள்ளார்.