பாஜக துணைத்தலைவர் சுட்டுக்கொல்லை: ஒருவர் கைது

ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (16:05 IST)
பீகார் மாநிலத்தின் பாஜக துணைத்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், 5 பேரை தடுப்பாக்காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பீகாரில் பாஜக துணைத்தலைவராக இருந்தவர் விசேஷ்வர் ஓஜா. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் ஷாப்பூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பர்சவுரா கிராமத்தில் நடந்த பாஜக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அவர் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் அவருடைய காரை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக அவரை சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
 
இந்த சம்பவத்தில் அவர் மற்றும் கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஓஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக இன்று ஹரேந்திர சிங் என்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். இவர் அந்த மர்ம கும்பலில் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும், பர்சவுரா கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். தடுப்பாக்காவலில் வைக்கப்பட்டுள்ள 5 பேர் அளித்த தகவல்களின் அடிப்படையில், மர்மகும்பலை பிடிப்பதற்கு உத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்திற்கு தனிப்படை காவலர்கள் சென்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்