ரூ. 600 கோடியில் திருமணம்; கூலி ஆட்களுக்கு செல்லாத பணம் - ரெட்டி மகள் திருமணத்தில் அநியாயம்

வியாழன், 17 நவம்பர் 2016 (19:42 IST)
பிரபல சுரங்க தொழில் அதிபரும், பாஜக முன்னாள் அமைச்சருமான காளி ஜனார்த்தன ரெட்டி, தனது ஒரே மகளின் திருமணத்தை சுமார் ரூ.600 கோடி செலவில் நடத்தியுள்ளார்.


 

ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும், ஹைதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன் ராஜிவ் ரெட்டிக்கும் நவம்பர் 16ஆம் தேதி புதன்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது.

மணமகள் பிராமணி அணிந்த முகூர்த்த புடவையின் விலை ரூ.17 கோடி எனவும், நெற்றிச்சுட்டி, தலை அலங்காரம் என எல்லா வைர நகைகளும் சேர்ந்து மொத்தம் 90 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

5 ஹெலிபேடுகள், 1,500 நட்சத்திர ஹோட்டல்கள், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்று 38 ஏக்கர் நிலத்தில் செட்டுகள், திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் என பணத்தைக் கொட்டிக் குவித்தார் ரெட்டி.

இந்த திருமணத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரபல திரை நட்சத்திரங்களும் பங்கேற்றதோடு பலகோடி ரூபாய் சம்பளம் பெற்று நடனமாடினர்.

இந்நிலையில், இந்த திருமணத்திற்கு கடும் உழைப்பை செலுத்திய ஏழை கூலி ஆட்களுக்கு, பணியாளர்களுக்கு செல்லாத, அதாவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஊதியமாக வழங்கி உள்ளனர்.

அதேபோல் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்களுக்கும்  பழைய நோட்டுகளே வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாற்ற வங்கி, வங்கியாக அலைய வேண்டுமே என்று பணியாளார்கள் நொந்துகொண்டு சென்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்