கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பல இடங்களில் மக்கள் ஊரடங்கை பின்பற்றாமல் இருப்பது பெரும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களை வீட்டிற்குள் இருக்க செய்ய போலீசாரும், அரசு அதிகாரிகளும் பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா ஹெல்மெட் மாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிகளை மீறுபவர்களை சாலையில் தோப்புகரணம் போட வைத்தல், டான்ஸ் ஆட வைத்தல், ட்ரோன் மூலம் துரத்துதல் மற்றும் கொரோனா ஆம்புலன்ஸ் சர்வீஸ் என விதவிதமாக ஒவ்வொரு பகுதியிலும் மக்களை விழிப்புணர்வு அடைய செய்வதற்காக முயற்சிகள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் ஒடிசாவில் கிராமம் ஒன்றில் திரியும் பேய் தற்போது பீதியை கிளப்பியுள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்க கிராம நிர்வாகத்தினர் பெண் ஒருவருக்கு பேய் போல ஒப்பனை செய்து இரவு நேரங்களில் வீதிகளில் செல்ல விடுகிறார்களாம். பேயை கண்டு அலறியடித்து ஓடிய மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவே அஞ்சி நடுங்குகிறார்களாம். இதன்மூலம் அந்த பகுதியில் மக்கள் கூடுவதை தவிர்த்து கொரோனா பாதிப்பு பரவாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.