முடங்கி கிடப்பதை விட முடிவெடுப்பது சிறந்தது! – 1700 கி.மீ சைக்கிளில் சென்ற இளைஞர்!

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:22 IST)
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக 1700 கிலோ மீட்டர்கள் சைக்கிளில் தொழிலாளி ஒருவர் பயணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளிகள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதும், அப்போது சில உயிரிழப்புகள் ஏற்படுவதும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒடிஷாவை சேர்ந்த மகேஷ் ஜீனா என்ற இளைஞர் தனது சொந்த ஊருக்கு செல்ல நினைத்துள்ளார். ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், தனது கையிருப்பில் பணம் குறைவாக இருந்ததாலும் ஊருக்கு செல்ல நினைத்த அவர் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.

தொழிற்சாலைக்கு சென்று வர வைத்திருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். போகும் வழியில் பல இடங்களில் தங்கி உண்டு, பலரிடம் வழிக்கேட்டு அவரது பயணம் தொடர்ந்துள்ளது. ஒரு வார காலத்தில் சுமார் 1700 கி.மீ பயணம் செய்து மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களை கடந்து ஒடிஷாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்குள்ள பள்ளியில் aவரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இந்த பயணம் குறித்து பேசியுள்ள அவர் “கொரோனாவால் முடங்கி கிடக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு முடிவு எடுப்பது சிறந்தது என தோன்றியது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்