வெட்கக்கேடு ; கூகுளில் சிந்துவின் சாதியை தேடி அலைந்த நெட்டிசன்கள்

சனி, 20 ஆகஸ்ட் 2016 (13:35 IST)
நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


 

 
ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, சிந்துவின் சாதி என்ன என்று தெரிந்து கொள்ள லட்சக்கணக்கானோர் முயற்சி செய்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.
 
என்னதான் சாதி மறுப்பு பேசினாலும், இந்தியாவை பொறுத்து வரை அது மக்களின் மனதில் ஆணிவேராக பதிந்துள்ளது. எந்த துறையில் சாதனை அடைந்தாலும், அவர் எங்கள் சாதியை சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் மனோபாவம் பலருக்கு இருக்கிறது.
 
அதன் வெளிப்பாடு சிந்து விஷயத்திலும் வெளிப்பட்டுள்ளது. கடந்த ஜீன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், சிந்துவின் சாதி என்ன என்று கூகுளில் தேடியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
அதுவும், ஒலிம்பிக் போட்டியில் அவர் படிப்படியாக முன்னேறிய இந்த ஆகஸ்டு மாதத்தில், கடந்த மாதத்தை விட 10 மடங்கானோர் அவரின் சாதியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.
 
முக்கியமாக, இந்த தேடல் ஆந்திரா-தெலுங்கானாவில்தான் அதிக பட்சமாக இருந்துள்ளது. காரணம், சிந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதுதான். அதிலும் ஒரு சிலர், சிந்துவின் பயிற்சியாளர் கோபி சந்தின் சாதியையும் சேர்த்து தேடியுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு காரணம் சிந்து ஆந்திராவுக்கு சொந்தமா அல்லது தெலுங்கானாவுக்கு சொந்தமா என்று தெரிந்து கொள்ளத்தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவரது சாதியை கண்டுபிடித்துவிட்டால், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் என்று அவர்கள்  முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
 
சிந்துவின் வெற்றியை, ஒரு இந்திய வீராங்கனையின் வெற்றியாக பார்க்காமல், அதிலும் சாதியை நுழைத்து ஆர்வம் காட்டுவது அருவருப்பான ஒன்று என்று சமூகவலைத்தளத்தில் கண்டனங்கள் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்