மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதி மீறலில் ஈடுபடுவோர்க்கு முன்னர் இருந்த அபராதத் தொகையை விட 10 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. உதாரணமாக லாரி ஓட்டுனர் ஒருவருக்கு 86,000 ரூபாய் அபராதமும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் லுங்கி அணிந்து ஓட்டியதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும் பரவலாக கண்டனங்களை எழுப்பியுள்ளன.
இந்த கடுமையானப் போக்குகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நடந்த மோடியின் 100 நாட்கள் ஆட்சி சாதனைகள் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது ‘மும்பையில் அதிக வேகத்தில் சென்றதாக என் பெயரிலுள்ள காருக்கு அதிகமான அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறினால் மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் அபராதம் கட்ட வேண்டும். அதிக அபராதத்தால் ஊழல் அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.