காங்கிரசுக்கு அடுத்த ஷாக்..! ரூ.1700 கோடி அபராதம்..! ஐ.டி நோட்டீஸ்..! ஐ.நா கவலை..!!

Senthil Velan

வெள்ளி, 29 மார்ச் 2024 (12:39 IST)
நான்கு நிதியாண்டுகளுக்கு வருமான வரியை முறையாக தாக்கல் செய்யாததால் 1700 கோடி ரூபாயை அபராதமாக  செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்தது. வங்கிக் கணக்குகளை முடக்கி தேர்தல் செலவுகளை செய்ய விடாமல் வருமான வரித்துறை தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
 
கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு நிதி செல்லாமல் தடுத்து நிறுத்தியதும் வருமான வரித்துறையின் செயலே என்று காங்கிரஸ் கட்சியால்  குற்றம் சாட்டப்படுகிறது. 
 
இந்த நிலையில் தற்போது அடுத்தகட்டமாக காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை வருமானவரித்துறை அளித்துள்ளது. நான்காண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதற்காக 1700 கோடி ரூபாயை வட்டியுடன் அபராதமாக செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
கடந்த 2017 - 18 ம் நிதி ஆண்டிலிருந்து 2021 - 22 நிதியாண்டு வரையிலான நான்காண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. அதனால் வட்டியுடன் அபராதமாக ரூபாய் 1700 கோடியை  காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இதனிடையே கேஜ்ரிவால் கைது, காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தேர்தல் நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது.

ALSO READ: தேர்தல் விதிமீறல்.! எல்.முருகன் மீது வழக்குப்பதிவு..!!
 
இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்