புதிய தலைநகரம் உருவாக்க நிலம் கிடைக்காவி்ட்டால் கையகப்படுத்தும் சட்டம் அமலாக்கப்படும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (08:56 IST)
ஆந்திராவின் புதிய தலைநகரத்தை உருவாக்க உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை தர சம்மதிக்காவிட்டால் நில கையகப்படுத்தும் சட்டம் அமல்படுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
 
விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளுக்கிடையே ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரம் உருவாகவுள்ளது. இந்நிலையில், தலைநகர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு நில கையகப்படுத்தலுக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
நிலக்கிழார்களை சம்மதிக்க வைக்க குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆலோசனைக் கமிட்டி தலைநகரை அமைக்க ஒரு லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது ஆந்திர அரசு 30,000 ஏக்கர் நிலமே போதுமானது என்று அறிவித்துள்ளது.
 
இந்தக் புதிய தலைநகரை உருவாக்க 3 முதல் 5 ஆண்டு காலம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. நில உரிமையாளர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
 
அதேபோல், அவர்களுக்கு ஆண்டுதோறும் 5 சதவீத விலையுயர்வுக்கும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. அதற்கான, பத்திரப்பதிவு, ஸ்டாம்ப் டூட்டி மற்றும் இதர கட்டணங்களும் இலவசமாக வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகருக்கான வரைபடம் தயாரானவுடன் நில உரிமையாளர்களுக்கு கையகப்படுத்தப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்