சில வருடங்களுக்கு முன் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வு எழுதிய மாணவி, அதில் தோல்வியடைந்ததால் வேறு வழியின்றி பொறியியல் படிப்பு படித்தார். ஆனால் இன்று அவருக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரிதுபர்னா என்ற மாணவி, பிளஸ் டூ முடித்தவுடன் நீட் தேர்வு எழுதி டாக்டராக நினைத்தார். ஆனால், நீட் தேர்வில் தோல்வியடைந்தபோது அவர் துவண்டு விடவில்லை. அதன் பிறகு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராக முடிவு செய்தார். ஆனால், அவரது பெற்றோர் பொறியியல் படிப்பு படிக்க அறிவுறுத்தினர். இதனை அடுத்து அவர் பொறியியல் படிப்பை படித்து கொண்டிருக்கும்போதே, அவர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார். இந்நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பொறியியலாளர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அவருக்கு ரோல்ஸ் ராய்ஸில் கிடைத்த இண்டர்ஷிப் வாய்ப்பு, ஒரு பொன்னான பணி வாய்ப்பாக மாறியுள்ளது. தற்போது அவர் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்காத நிலையில், நிறுவனத்திற்காக இரவில் பணிபுரிந்து வருவதாகவும், பகலில் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று வேலை பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.