நம்புங்கள்! - மக்கள் கஷ்டங்களுக்காக வருத்தப்படுகிறாராம் மோடி

திங்கள், 26 டிசம்பர் 2016 (23:26 IST)
மக்கள் அனுபவித்துவரும் கஷ்டங்களுக்காக வருத்தப்படுகிறேன் என்று மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


 

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், அறிவிப்பால் 100க்கும் மேற்பட்ட உயிரழிப்புகள் ஏற்பட்டன. மேலும், இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் [மன் கி பாத்] என்ற வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஞாயிறன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”சமூகத்தில் ஊழல்கள் பற்றியும் முறைகேடுகள் பற்றியும் மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ராணுவப்படையினர் போல் போராட வேண்டும்.

அனைத்துக் குடிமக்களும் தற்போது அனுபவித்து வரும் கஷ்டங்களுக்காக நானும் வருந்துகிறேன். சிலர் அரசின் செயல்பாடுகள் மீது தவறு கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடியே ஆகவேண்டும்.

வருமான வரிச் சோதனையில் நிறைய ஊழல் பேர்வழிகள் சிக்குகின்றனர், இதற்கான தகவலை அளித்தது பொதுமக்கள்தான். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

விவசாயத்தைப் பொறுத்தவரை விதையிடுதலில் நாம் கடந்தாண்டு சாதனையை முறியடித்துள்ளோம். உலகப் பொருளாதார அரங்கிலும் இந்தியா சில மைல்களை தொட்டுள்ளது. இந்தியாவின் உலகப் பொருளாதார நிலை முன்னேறியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அனைத்து இடையூறுகளுக்கு இடையேயும் மாற்றுத் திறனாளிகள் மசோதாவை நிறைவு செய்துள்ளோம். மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக ரூ.352 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் கருண் நாயர், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய வீரர்களின் சாதனைகளுக்காக பெருமையடைவோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற ஜூனியர் ஹாக்கி அணிக்கு எனது வாழ்த்துகள். கடந்த மாதம் மகளிர் ஹாக்கி அணி ஆசியக்கோப்பையை வென்றது.

விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் நிறைய பயன்பெறுவர். மின்னணு முறைக்கு மாறும் விவசாயிகளுக்கு அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்