அதிகாரியை பளார் விட்ட ஆந்திர எம்பி சென்னையில் கைது

ஞாயிறு, 17 ஜனவரி 2016 (11:48 IST)
ஆந்திராவில் விமான நிலைய அதிகாரியை கன்னத்தில் பளார் விட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டியை சித்தூர் மாவட்ட காவல் துறையினர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.


 
 
திருப்பதி விமான நிலையத்துக்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை வரவேற்க கடந்த நவம்பர் மாதம் விமான நிலையம் வந்த அக்கட்சியின் ராஜம்பேட்டை தொகுதி எம்பி மிதுன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதி இன்றி விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்.
 
அனுமதியில்லாமல் நுழைந்த இவர்களை விமான நிலைய பாதுகாவலர்கள் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட வக்குவாதத்தில் விமான நிலைய மேலாளர் ராஜசேகர் மிதுன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.
 
விமான நிலைய மேலாளர் ராஜசேகர் அவர்கள் மீது காவல் துறையில் அளித்த புகாரில் மிதுன் ரெட்டி செவிரெட்டி, பாஸ்கர் ரெட்டி, மதுசூதன் ரெட்டி மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் 15 பேர் மீது விமான நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இவர்களில் 16 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது மிதுன் ரெட்டி வெளிநாடு தப்பி சென்று விட்டார், அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு அவரை ஆந்திர காவல் துறையினர் தேடி வந்தனர்.
 
இந்நிலையில் மிதுன் ரெட்டி பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் சென்னை வருவதாக தகவல் அறிந்த காவல் துறையினர், நேற்று நள்ளிரவு 1 மணிக்கு எம்.பி. மிதுன் ரெட்டியையும் அவருடன்வந்த மதுசூதன் ரெட்டி ஆகியோரை சித்தூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்