உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரை சேர்ந்த ராஜீவ் கூம்பர் என்ற எம்.எல்.ஏ. தனது தொகுதியில் சாலையின் நடுவே நின்ற மின்கம்பங்களால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட இடையூறை அகற்ற கோரிக்கை விடுத்தார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டியதால், தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.50,000 கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ராஜீவ் கூம்பர், தனது தொகுதியில் ஒரு சாலையில் நடு ரோட்டில் மின்கம்பங்கள் இருப்பதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மின்வாரிய அதிகாரிகளோ நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அந்த கம்பங்களை அகற்ற முடியாது என்று கூறினர்.
இதனை தொடர்ந்து, ஆத்திரமடைந்த ராஜீவ் கூம்பர், தனது பையிலிருந்து ரூ.50,000 எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்து, "இந்த பணத்தை வைத்து உடனடியாக அந்த மின்கம்பங்களை அகற்றுங்கள்" என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"பொதுநலம் சார்ந்த அத்தியாவசிய பணிகளை காலவரையின்றி தாமதப்படுத்த முடியாது. நான் பணம் கொடுக்கிறேன், இன்னும் வேண்டுமானாலும் கொடுக்கிறேன்" என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், "பொதுநலப் பணிகளில் அலட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மின்வாரிய அதிகாரிகள் இனிமேலாவது பொதுநலப்பணிகளுக்கு நிதியை ஒதுக்க முன்வர வேண்டும்" என்று எம்.எல்.ஏ. கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.