அந்தப்புரமான ஆளுநர் மாளிகை - பாலியல் புகாரால் கவர்னர் ராஜினாமா!

வெள்ளி, 27 ஜனவரி 2017 (11:11 IST)
ஆளுநர் மாளிகையில் பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 

தமிழகத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன்தான் கடந்த 2015ஆம் ஆண்டு மேகாலயா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவருக்குத் திருமணமாகவில்லை. இந்நிலையில், கவர்னர் மாளிகைக்கு மக்கள் தொடர்பு அதிகாரிகளை நியமனம் செய்யும் நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.

அதில் கலந்து கொண்ட பெண்களுக்கு,  சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு நேர்காணல் செய்ய வேண்டுமென பெண் ஒருவரை அழைத்துள்ள ஆளுநர் சண்முகநாதன், அந்த பெண்ணின் அழகை வர்ணித்ததோடு, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்தப்  பெண், அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ளார். ஆனால், ஏற்கனவே மக்கள் தொடர்பு அதிகாரியாக வேறொருவரை நியமித்துவிட்டு அந்த பெண்ணை நேர்முக தேர்விற்கு அழைத்துள்ளார்.

அவரது இந்த பாலியல் தொல்லைகள் குறித்து மக்கள் தொடர்பு அதிகாரி வேலைக்காகக் காத்திருந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் தெரியவர, வேலைக்குத் தேர்வானவர்கள் முதல் பலரும் கவர்னர் சண்முகநாதனுக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆளுநர் மாளிகை பணிபுரியும் ஊழியர்களுக்கும் கூட சண்முகநாதன் பாலியல் தொல்லைகள் கொடுக்கத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஊழியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், ”கவர்னர் சண்முகநாதன், கவர்னர் மாளிகையின் கண்ணியத்தை காக்க தவறி விட்டார். கவர்னர் மாளிகையை ‘இளம்பெண்கள் கிளப்’ ஆக அவர் மாற்றி விட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, நேர்முக தேர்வுக்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற கவர்னர் சண்முகநாதனை, பிரதமர் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து, மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்