ரம்ஜான் நோன்பு இருந்தவர் வாயில் உணவு திணிப்பு விவகாரம்: அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக சிவசேனா குற்றச்சாற்று

வியாழன், 24 ஜூலை 2014 (16:52 IST)
ரம்ஜான் நோன்பு இருந்தவர் வாயில் உணவு திணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த சிவசேனா, இவ்விவகாரத்தில் மதச் சாயம் பூசப்பட்டு அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது என குற்றம்சாற்றியுள்ளது.
 
இது தொடர்பாக சிவசேனாயின் அதிகாரப்பூர்வ பத்திரிகை சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், "மகாராஷ்டிரா சதானில் நடந்த சம்பவம் நிர்வாக சீர்கேட்டிற்கு எதிரான ஒரு போராட்டம். அந்தச் சம்பவத்திற்கு மதச் சாயம் பூசப்பட்டு அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது. இதன் மூலம் சிவசேனா கட்சிக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என இவ்வாறு செய்யப்படுகிறது.
 
சிவசேனா அனைத்து மதத்தினையும் மதிக்கிறது. ஆனால், யாரேனும் தங்கள் மத அடையாளத்தை பயன்படுத்தி சிவசேனா கட்சிக்கு களங்கம் விளைவிக்க முயன்றால் அதை கட்சி பொறுத்துக் கொள்ளாது. யாராக இருந்தாலும், தங்கள் மதத்தை மனதிலும், இல்லத்திலும் வைத்திருக்கட்டும். ஆனால், அதை தோள்களில் சுமந்து கொண்டு சிவசேனாவுடன் விளையாடினால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிரா சதானில் வழங்கப்படும் உணவு தரம் குறித்தும் வெகுவாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உணவுத் தரம் குறித்து கேண்டீன் மேற்பார்வையாளரிடம் கேள்வி எழுப்பினால் அது தவறா? அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் தவறா? கேண்டீனில் வழங்கப்பட்ட சப்பாத்தி தரமற்றதாக இருந்தது.
 
எனவேதான் அதை, கேண்டீன் மேற்பார்வையாளிடம் நீங்களே சுவைத்துச் சொல்லுங்கள் என்ற வகையில் அவர் முகத்துக்கு நேரே சப்பாத்தி நீட்டப்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்று அவர் முகத்தில் எழுதியா ஒட்டியிருக்கிறது? என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
 
மகாராஷ்டிரா சதான் தனிநபர் ஆளுமையில் இருக்கிறது. அதன் தரம் தாழ்ந்துவிட்டது. இது மராட்டியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானம். எம்.பி.க்கள் புகார் குறித்து கண்டு கொள்ளாத மகாராஷ்டிர முதல்வரும், மாநில தலைமைச் செயலரும் சம்பவத்திற்கு மதச் சாயம் பூசுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
 
இவ்விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில், ஆப்கனில் மசூதிக்குள் வைத்து 10 வயது சிறுமியை ஒரு மெளல்வி பலாத்காரம் செய்துள்ளார். பெங்களூரில் 1 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்தவர் ஒரு முஸ்லிம்.
 
ஆனால், இவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்வதற்கு ஊடகங்களும், சுயநல அரசியல்வாதிகளுக்கும் ஒன்றும் இல்லை. ஆனால், அதே ஊடகங்கள் சிவசேனா எம்.பி. நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கின்றன என சாம்னா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்