நான் தான் தமிழன்: எடப்பாடி வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போகும் மார்கண்டேய கட்ஜூ!

திங்கள், 27 பிப்ரவரி 2017 (10:51 IST)
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தமிழக விவகாரங்களில் அடிக்கடி கருத்து கூறி வருபவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தானும் தமிழன் தான் அடிக்கடி கூறி பெருமைப்பட்டுக்கொள்வார் அவர்.


 
 
தமிழகத்தில் சசிகலா ஆதரவில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொதும்மக்கள் எப்படி எதிர்த்தார்களோ அதே போல மார்கண்டேய கட்ஜூவும் கடுமையாக எதிர்த்தார். இதனை எடப்பாடி பழனிச்சாமியை பினாமி முதல்வர் என கடுமையாக விமர்சித்தார்.
 
சசிகலாவின் கைப்பாவையாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதற்கு தமிழர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என கோபப்பட்ட மார்கண்டேய கட்ஜூ நான் தமிழன் என்று சொல்வதற்கு வெட்கப்படுவதாக கூறினார். இந்நிலையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர் நான் தமிழன் என்பதை காட்ட பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.
 
அதில், சமூக வலைதளங்களில் இருந்து வரும் கருத்துக்களை பார்த்தால் அனைவரும் பெங்களூர் சிறையில் இருந்து இயக்கப்படும் தமிழக பினாமி அரசின் மீது பயத்தில் உள்ளதாக தெரிகிறது. ஆனால் பயமில்லாத ஒரு தமிழன் இருக்கிறான். அது நான் தான்.
 
எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் வெளிநாட்டில் இருந்து மே மாத இறுதியில் வந்தவுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு அல்லது அலுவலகத்தின் முன்பு சிறைப்பறவையால் நடத்தப்படும் பினாமி ஆட்சி ஒழிக என எழுதப்பட்ட பேனருடன் போராட்டம் நடத்துவேன்.
 
ஒன்னு அவர்கள் என்னை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதுவரை எனது போராட்டம் தொடரும். தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு தமிழனாவது இருக்கிறான் என்பதை காட்ட தான் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உறுதிபட கூறியுள்ளார் மார்கண்டேய கட்ஜூ.

வெப்துனியாவைப் படிக்கவும்