ஹவாலா பணம் எதிரொலி: அதிரடி ரெய்டுகளால் மூடப்பட்ட நகைக்கடைகள்!

சனி, 12 நவம்பர் 2016 (14:45 IST)
ஹவாலா பணம் கைமாறப்படுவதாக வெளியான ரகசிய தகவலை அடுத்து, வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் பெரும்பாலான நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன.


 

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கோள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை [10-11-16] முதல் மக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதன்மூலம் வரி செலுத்தாமல் கணக்கில் வராத பணங்களை மாற்றும் போது அவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.

இதனையடுத்து, உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள பணத்தை நகையாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர்.

இதனால், நகை விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து, தங்கம் வாங்குபவர்கள், தங்களது பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. மேலும் இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் வரிமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தில்லியில் கரோல் பாக், தரிபாகலான், சாந்தினி சவுக் ஆகிய இடங்களிலும் மும்பையில் 3 இடங்களிலும், சண்டிகார், லூதியானா நகரங்களில் சில இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழனன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல், சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் இயங்கிக் கொண்டிக்கும் நகை கடைகள் மற்றும் ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வரிமான வரித்துறையினர் நாடு முழுவதிலும் உள்ள நகைக்கடைகளில் நடத்திய சோதனை காரணமாக நகைக்கடை வியாபாரிகள் இன்று பெரும்பாலான கடைகளை திறக்கவில்லை. இதனால், வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்