ஜாதிக் கொடுமையால் அவமானம் : தனி ஆளாக கிணறு தோண்டிய தொழிலாளி

திங்கள், 9 மே 2016 (12:54 IST)
கிணற்றிலிருந்து தன்ணீர் எடுப்பது தொடர்பாக, உயர் ஜாதிக்காரர் ஒருவர் அவமானப்படுத்தியதால், கோபமடந்த ஒரு தலில் தொழிலாளி தனி ஆளாக உழைத்து ஒரு கிணற்றை தோண்டிய விவகாரம் தெரியவந்துள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.  கலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள், கிணறுகள் வைத்திருக்கும் உயர் ஜாதிக்காரர்களிடம் சென்று, அவர்களின் அனுமதியோடு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம்.
 
அதுபோல், ஒரு ஏழைத் தொழிலாளி பாபுராம் தாஜ்னி, தனது மனைவியுடன் வழக்கம் போல் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால், கிணற்றின் உரிமையாளர் அவர்களை அவமானப் படுத்தி அனுப்பி விட்டார்.
 
இதனால், வைராக்கியத்துடன் வீட்டிற்கு திரும்பிய பாபுராவ், இனிமேல் தனது கிராம மக்கள், தண்ணீருக்காக யாரிடம் கெஞ்சக் கூடாது என்று முடிவெடுத்தார். தனது கிராமத்தில் ஒரு கிணறு தோண்டவும் முடிவெடுத்தார். அதற்காக ஒரு இடத்தையும் தேர்வு செய்தார். 
 
அவர் தேர்ந்தெடுத்த இடம் அருகே இருந்த கிணறுகள் வரண்டு போயிருந்தது. எனவே பாபுராவை பார்த்து கிராம மக்கள் சிரித்தார்கள். இது வெட்டி வேலை என்று கிண்டல் செய்துள்ளனர். ஆனால், அவர் அதைக் கண்டு கொள்ளாமல் கிணறு வெட்டும் முயற்சியில் இறங்கினார்.
 
கிணறு வெட்டுவதற்கான கடப்பாறை, மண் வெட்டிகளை வாங்கினார். இத்தனைக்கும் அவர் கிணறு வெட்டும் இடத்தை தேர்வு செய்ய எந்த புவியியல் கருவிகளை கூட அவர் பயன்படுத்தவில்லை. இங்கு தோண்டினால் தண்ணீர் வரும் என்ற அவரது நம்பிக்கையையே மூலதனமாக கொண்டு காரியத்தில் இறங்கினார்.
 
நான்கு ஐந்து பேர் சேர்ந்து செய்யும் வேலையை தனி ஆளாக செய்தார். தினக்கூலி வேலைக்கு செல்லும் அவர், தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் நான்கு மணி நேரமும், வேலை முடித்து திரும்பி வந்து இரண்டு மணி நேரமும் உழைத்துள்ளார் பாபுராவ்.
அந்த கிராம மக்களோ, அவரது மனைவியோ கூட யாரும் அவருக்கு உதவவில்லை. ஆனாலும் மனம் தளராமல் கிணறு தோண்டியுள்ளார். மொத்தம் 40 நாட்கள்  உழைத்து 15 அடி ஆழமும், 6 அடி அகலமும் உடைய அவர் கிணறு தோண்டியுள்ளார்.  
 
அவரின் உழைப்பும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவர் தோண்டிய கிணற்றில் தண்ணீர் வந்தது. தற்போது அந்த கிராம மக்களே அவரை கொண்டாடுகின்றனர். 
 
அந்த கிணற்றை ஆழப்படுத்த அந்த கிராம மக்களும், அவரது மனைவியும் அவருக்கு உதவி வருகின்றனர். அவரை பற்றிய தகவல் வெளியே கசிந்தது. கிராமத் தலைவரும், வட்டாட்சியரும் அவரை பாராட்டியுள்ளனர். நடிகர் நானாபடேகர் தொலைபேசியில் அவரை அழைத்து பாராட்டியிருக்கிறார். அரசு தரப்பிலிருந்து உதவி செய்யவும் வட்டாட்சியர் முன் வந்துள்ளார்.  
 
இதுபற்றி கருத்து தெரிவித்த பாபுராவ் “ என்னை அவமானப்படுத்தியவரின் பெயரை கூற விரும்பவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் என்பதால்தானே அவர் அவமானப்படுத்தினார். இனி என் குடும்பமும், என் கிராம மக்களும் தண்ணீருக்காக யாரிடம் கையேந்தக்கூடாது என்று முடிவெடுத்தேன். அதனால் இந்த கிணற்றை தோண்டினேன். என் உழைப்புக்கு வெற்றியும் கிடைத்து உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்