அமளியில் ஈடுபட்ட 27 உறுப்பினர்கள் இடைநீக்கம் - சபாநாயகர் உத்தரவு

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (17:33 IST)
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
 
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறவிடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அலுவல்கள் ஏதும் முறையாக நடக்கவில்லை.
 
இந்நிலையில், இன்றும் காலை நாடாளுமன்றம் தொடங்கியபோது, இரு அவைகளிலும் லலித் மோடி விவகாரத்தையும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
 
மக்களவையில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே கேள்வி நேரம் முழுமையாக நடந்தது. பின்னர், நண்பகல் 12 மணி அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இதற்கிடையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முற்றுகையிட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 27 பேரை கூட்டத்தொடர் நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு 5 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்