பள்ளியில் நுழைந்த சிறுத்தை, கடித்து அட்டகாசம் செய்யும் மிரட்டல் வீடியோ

திங்கள், 8 பிப்ரவரி 2016 (09:19 IST)
ஒரு தனியார் பள்ளிக்குள் ஒரு சிறுத்தை நுழைந்த விவகாரம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூரு மாநிலத்தில் வர்த்தூர் எனும் ஊரில் விப்கையர் ஆங்கிலப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
 
நேற்று காலை அவர்கள் பள்ளிக்கு வந்து சிசிடிவி கேமராவை வழக்கம் போல் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்கு வளாகத்திற்குள் அதிகாலை 4 மணியளவில் ஒரு சிறுத்தை நுழைந்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது அவர்களுக்கு தெரிய வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடனடியாக வனத்துறையினரை வரவழைத்தனர். அதற்குள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, அந்த பள்ளியை சுற்றி பொது மக்களும், பத்திரிக்கையாளர்களும் கூடி விட்டனர்.
 
பள்ளிக்குள் சிறுத்தை எங்கு ஒளிந்துள்ளது என்பதை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக மதியத்திற்கு மேல் சிறுத்தை வெளியே வந்தது. ஆனால் மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்ட சிறுத்தை பள்ளியை விட்டு வெளியேற முடியாமல், பள்ளி வளாகத்திலேயே சுற்றி வந்தது. மேலும் தன்னை படம் எடுக்க முயன்ற ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் தன்னை பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் சிலரையும்  அந்த சிறுத்தை தாக்கியது. அதில் 4 பேர் காயமடைந்தனர். வனத்துறை அதிகாரிகள், மயக்க ஊசியை செலுத்தி சிறுத்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
 

நன்றி ANI
 
கடைசியாக, அந்த சிறுத்தை ஒரு கழிப்பறைக்குள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வனத்துறையினர் அந்த அறையின் வெளிப்புறமாக தாழிட்டனர். அதனால் சிறுத்தையால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. 
 
அதன்பின் மயக்க ஊசி செலுத்தி, மாலை 6.15 மணியளைவில் வனத்துறையினர் சிறுத்தையை மயக்கம் அடைய செய்தனர்.  பிறகு, அதை கூண்டில் அடைத்து, பன்னரகட்டா தேசிய பூங்காவிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அதன்பின் காவல் அதிகாரிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்தனர்.
 
ஒரு பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்