லேப்டாப்பை பயன்படுத்தி ஆடி, பென்ஸ் கார்களை திருடும் மூளைக்கார திருடர்கள்
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (16:23 IST)
டெல்லியில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 சொகுசு கார்கள் திருடு போவதாக போலீசாரின் திடுக்கிடும் தகவல் கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் கூட அசால்ட்டாக திருடுவது தான் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சொகுசு கார்கள் திருடு போவது குறித்து போலீசார் தீவிர புலனாய்வு மேற்கொண்ட போது, கார் திருட்டில் ஈடுபட்ட ஒருவனை பிடித்து விசாரித்தனர். அதில், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.
சாஃப்ட்வேர் எஞ்சினியர் முதல் சாதாரண மெக்கானிக் வரை இந்த திருட்டு கும்பலில் இருப்பது தெரிய வந்துள்ளது. விலை உயர்ந்த சொகுசு கார்களில் இம்மொபைலைசர் என்ற பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனை மீறி காரை ஸ்டார்ட் செய்வது எளிதள்ள.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த காரை எவ்வாறு திருடினர் என்பது குறித்த அந்த திருடனின் பதில்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
புதிய காரை புக்கிங் செய்து வாங்குவது போல, இந்த திருட்டு கார்களும் ஆர்டரின் பேரில்தான் திருடப்பட்டு விற்கப்படுகிறதாம். திருடப்படும் குறிப்பிட்ட கார் சாவியின் சாஃப்ட்வேர் குறியீடுகளை அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணத்தை காட்டி வாங்குகின்றனர் அல்லது சர்வீஸ் மையத்தில் மெக்கானிக் போல சேரும் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் மூலமாக கார் சாவியின் சாஃப்ட்வேரை பெறுகின்றனர்.
அதனை லேப்டாப்பில் உள்ள விசேஷ சாப்ட்வேர் மூலமாக, குறிப்பிட்ட காருக்கான மாஸ்டர் சாஃப்ட்வேரை தயாரித்து, அதனை உயர் ரக கார்களில் இருக்கும் சாஃப்ட்வேருடன் இணைத்து கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்து திருடியுள்ளனர்.
இம்மொபைலைசர் பொருத்தப்பட்ட கார்களை திருடவே முடியாது என்று கார் நிறுவனங்கள் தெரிவித்து வரும் நிலையில், லேப்டாப்பை பயன்படுத்தி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்று, கார் எங்கிருக்கிறது என்று காட்டும் ஜிபிஎஸ் சாதனத்தையும் செயலிழக்கச் செய்து திருடிச் சென்றிருக்கின்றனர்.
காரை திருடும்போது சந்தேகம் வராத வகையில், பெண்களை வைத்து திருடியிருக்கின்றனர். கார் திருடியவுடனே, அதனை திருட்டு கும்பலுக்கு சொந்தமான ரகசிய இடத்திற்கு கொண்டு வந்து தனித்தனியாக பிரிக்கின்றனர்.
கார்களில் இருக்கும் சைடு வியூ மிரர்கள், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல ஆக்சஸெரீகளை ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் மூலமாக ஒரிஜினல் உதிரிபாகம் என்று கூறி நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர்.
கார் எஞ்சின்களை தனியாக கழற்றி, அதனை இதர மாநிலங்களில் விற்பனை செய்கின்றனராம். அதாவது, விவசாய பம்புசெட்டுகளில் நீர் இறைக்கும் எந்திரமாக பயன்படுத்துகின்றனர். சிலர் வீடுகளுக்கு ஜெனரேட்டராகவும் மாற்றி பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இது போலீசாருக்கும், கார் உரிமையாளர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டில் டெல்லியில் 31,000 கார்கள் திருடு போயுள்ளது. அதில், 1,770 கார்கள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டிருக்கிறது.