குவைத் தீ விபத்து..! கொச்சி வந்த உடல்களுக்கு அஞ்சலி..! தமிழர்களின் உடல்களை பெற்ற அமைச்சர் மஸ்தான்..!!

Senthil Velan

வெள்ளி, 14 ஜூன் 2024 (12:25 IST)
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 31 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. தமிழர்களின் உடல்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக்கொண்டார்.
 
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். 

இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில்  புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் மளமளவென தீ பரவியதில் 49 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள். இதில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர், தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் பலியானார்கள். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 31 பேரின் உடல்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
 
தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டார்.

அவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடவுள்ளார். உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்