சட்ட விரோதமாக யானை வளர்த்த கேரள முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

ஞாயிறு, 28 ஜூன் 2015 (02:15 IST)
சட்ட விரோதமாக யானை வளர்த்த கேரள முன்னாள் அமைச்சர் கணேஷ்குமார் மீது கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 

 
மலையாள சினிமா நடிகரான இருந்த கணேஷ் குமார், தற்போது பத்தானாபுரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்த 7 வயது யானையை, வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
 
ஆனால், அந்த யானையை கோயிலில் விடாமல் சுமார் 20 ஆண்டுகளாக வீட்டில் வளர்த்துள்ளார். மேலும், கோயில் திருவிழா, திருமணம் போன்ற காலங்களில் யானையை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்தார் எனப் பரபரப்புப் புகார்கள் எழுந்தன.
 
இதனால், இவர் மீது பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகிகள், கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்குப் புகார் அனுப்பினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில், சட்ட விரோதமாகக் கணேஷ் குமார் தனது வீட்டில் யானையை வளர்த்து வருவதாகத் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் சசிதரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கணேஷ் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஜான் இலிகாடன் நோட்டீஸ் அனுப்பினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்