ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 38000 துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீரின் முக்கியமானத் தலைவர்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து இன்று காலை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதிகள் என்னென்ன ஆர்ட்டிகிள் 370 & 35 A ஆகியவைக் காஷ்மீர் மக்களுக்கு வழங்கும் சலுகைகள் பற்றி கே எஸ் ராதாகிருஷ்ணன் என்பவர் முகநூல் பதிவின் மூலம் விளக்கியுள்ளார்.
காஷ்மீர் பகுதியை 1947இல் இந்தியாவுடன் இணைப்தற்காக, அப்போதைய மன்னர் ராஜா ஹரி சிங் வேண்டுகோளின்படி, அரசியல் சாசனப் சிறப்பு பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது.
* காஷ்மீரில் வசிக்கும் நிரந்தர குடியுரிமையினர் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு நிலம் மற்றும் சொத்துகள் வாங்க முடியாது.
* காஷ்மீர் பெண், மற்ற மாநிலத்தவரை திருமணம் செய்தால், அந்தப் பெண்ணின் காஷ்மீர் குடியுரிமை ரத்தாகிவிடும். கடந்த 2002ஆம் ஆண்டில் காஷ்மீர் உயர்நீதிமன்றம், பெண்களுக்கு குடியுரிமை சலுகை உண்டு எனத் தீர்ப்பளித்தது. ஆனால், அவர்களது குழந்தைகளுக்கு, குடியுரிமை சலுகை கிடையாது.
* காஷ்மீர் மாநிலத்தை சாராதவர்கள், அம்மாநில அரசு வேலையில் இடம்பெற முடியாது.
* காஷ்மீர் மாநில அரசு கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் மற்ற மாநிலத்தை சார்ந்தவர்கள் சேர முடியாது.
* காஷ்மீர் அரசு வழங்கும் உதவித் தொகை, சமூக நலத்திட்டங்கள் என எந்த நிதியுதவியையும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே பெறமுடியும்.
* மாநில சட்டசபை இயற்றும் எந்தச் சட்டமும், அரசியல் சாசனத்துக்கோ, பிற சட்டத்துக்கோ முரணாக இருக்கிறது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.
* ஒட்டுமொத்த இந்திய அரசியல் சாசனமும், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
* புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமென்றால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.
* இந்தப் பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட வேண்டும்.
* மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல்படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.
* ஜம்மு – காஷ்மீருக்கு தனியாக அரசியல் சாசனமும் உண்டு