பீகார் முதலமைச்சர் ஜித்தன்ராம் மாஞ்சி ராஜினாமா செய்தார்

வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (14:46 IST)
பீகார் சட்டப்பேரவையில் இன்று பலப்பரீட்சை நடக்க இருந்த நிலையில் முதலமைச்சர் பதவியை ஜித்தன்ராம் மாஞ்சி ராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளராக இருந்த ஜித்தன்ராம் மாஞ்சி, கடந்த மே மாதம் 20ஆம் தேதி முதலமைச்சர் ஆனார். ஆனால் நிதிஷ் குமார் இப்போது முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பினாலும், அவருக்கு மாஞ்சி வழி விட மறுத்துவிட்டதால் பீகாரில் அரசியல் குழப்ப நிலை உருவாகியது.
 
முதலமைச்சர் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, கட்சி சாராத உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்து வந்த அமைச்சர்கள் நரேந்திரசிங், பிரிஷன் படேல், சாஹித் அலிகான், சம்ரத் சவுத்ரி, நிதிஷ் மிஷ்ரா, மகாசந்திர பிரசாத் சிங், பீம்சிங் ஆகியோர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மாஞ்சி, நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்திருந்தார். அதன்மீது ஓட்டெடுப்பு நடக்க இருந்தது. இந்தப் பலப்பரீட்சையில் அவர் வென்றால்தான் பதவியைத் தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.
 
இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தினை சட்டப்பேரவை சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி, நேற்று வழங்கினார். அந்தக் கட்சியின் தலைவர் விஜய் சவுத்ரி, பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அந்தப் பதவியில் இருந்து வந்த பாரதீய ஜனதா கட்சியின் நந்த் கிஷோர் யாதவின் பதவி பறிபோனது. இதேபோன்று மேல்–சபையிலும், அந்தக் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும் என தகவல் வெளியாகியது.
 
பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தநிலையில் முதலமைச்சர் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாஞ்சி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கேசாரி நாத் திரிபாதியிடம் வழங்கியுள்ளார் என்று ஆளுநரின் கொள்கைச் செயலாளர் மெக்ரோதா தெரிவித்துள்ளார்.
 
ராஜினாமா கடிதம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் கடிதத்தில் ஒரு வரியில் மட்டும் ராஜினாமா சமர்பிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காலை 10 மணியளவில் கவர்னரை மாஞ்சி ஒரு 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர் ராஜினாமாவை சமர்பித்துள்ளார். அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது.
 
இதனையடுத்து மாஞ்சி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். தான் மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே பீகார் சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்