சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தவிர வேறு செய்தியே இல்லையா? - சித்தராமையா கேள்வி

புதன், 23 ஜூலை 2014 (17:02 IST)
பெங்களூருவில் சிறுமி பலாத்கார வழக்கு குறித்து செய்தியாளர்கள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது அவர், சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தவிர, வேறு செய்தியே இல்லையா எனக் கேட்டதற்கு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இவ்வழக்கு தொடர்பாக அப்பள்ளியின் ஸ்கேடிங் பயிற்சியாளரான முஸ்தபா என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லாப்டாப்பில் சிறுமிகள் பாலியல்  கொடுமைக்கு ஆளாவது போன்ற பல ஆபாச வீடியோக்கள் டவுன்லோட் செய்யப்பட்டிருந்ததும், அவர் ஏற்கனவே ஒரு பள்ளியில் இதேபோன்ற புகாரில் சிக்கி வேலை இழந்ததும் தெரியவந்தது. 
 

 


இந்நிலையில், சிறுமி பலாத்கார வழக்கு குறித்து செய்தியாளர்கள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது அவர், சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தவிர, வேறு செய்தியே இல்லையா? எனக் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
6 வயது சிறுமி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் சித்தராமையா அலட்சியத்துடன் பேசியிருப்பதாக எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து கர்நாடக சட்டசபையில் கடந்த வாரம் விவாதம் நடைபெற்றபோது, சித்தராமையா தூங்கிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்