'இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே': ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சால் சர்ச்சை!

திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (17:46 IST)
இந்தியர்கள் என்றாலே இந்துக்கள்தான் என உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்தியா என்பது இந்துஸ்தான் என்றும்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
 
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வார பத்திரிகை ஒன்றின் பொன் விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "இந்தியர்கள் என்றாலே இந்துக்கள்தான் என உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா என்பது இந்துஸ்தான் தான். இது ஒரு எளிதான விஷயம்.
 
இங்கிலாந்தில் வாழ்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும், ஜெர்மனியில் வாழ்பவர்கள் ஜெர்மானியர்கள் என்றும், அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் என்றும் அழைப்படுகின்றனர். எனவே இந்துஸ்தானில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களாகவே அறியப்படுகின்றனர்.
 
கலாச்சார அடிப்படையில் இந்துத்துவா என்ற பெயராலேயே இந்தியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த நாட்டில் தற்போது வாழ்பவர்களின் மூதாதையர்களும் இந்த மகத்தான கலாசாரத்தை கொண்டவர்களாகத்தான் திகழ்ந்தனர்.
 
இந்துக்கள் என்று கூறப்படுபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த கடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக கூட இருக்கலாம். கடவுளை வழிபடாதவன் நாத்திகவாதி இல்லை. தன்னம்பிக்கை இல்லாதவனே உண்மையான நாத்திகவாதி.

ஆதிகாலம் முதலே வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்களை ஒருங்கிணைத்திருப்பது இந்துத்துவா என்பதை தற்போது உலகம் உணந்துள்ளது. ஆனால் இந்தியாவில் சிலர் அதனை புரிந்துகொள்ளாமல் இது தொடர்பான விவாதத்தின் போதெல்லாம் தவறாக இனவாதம் என்று முத்திரையை ஏற்படுத்துகின்றனர்.
 
தற்போதைய உலக சூழ்நிலையில், எங்கு பார்த்தாலும் இருள் சூழ்ந்துள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு இந்தியாவில்தான் உள்ளது என்பதை உலகம் உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ளது. ஏனென்றால் இந்தியா வாழ்க்கை நெறிகள் அடிப்படையில், கலாச்சார அடிப்படியில் சரியான பாதையில் செல்கிறது. "தர்மம் இந்தியாவில் உள்ளவரையில், உலகம் தொடர்ந்து இந்தியாவை மதிக்கும். ஆனால் தர்மம் இந்நாட்டை விட்டு சென்றுவிட்டால், இந்த தேசம் பிளவுபடுவதை பூமியில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார்.
 
இந்நிலையில் மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா என்பது 'பாரத்' என்றுதான் அழைக்கப்படுகிறதே தவிர இந்துஸ்தான் என அழைக்கப்படவில்லை என இக்கட்சிகள் கூறியுள்ளன.
 
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான மணிஷ் திவாரி, "மோகன் பகவத்தின் இந்த கருத்து கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பகவத் நன்றாக படிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் இந்தியாவை 'பாரத்' என்றுதான் குறிப்பிட்டுள்ளனரே தவிர 'இந்துஸ்தான்' என குறிப்பிடவில்லை. உண்மை என்ன என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்துகொள்ளவில்லை" எனக் கூறியுள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, "அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ். மதிக்கிறதா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
 
அதேப்போன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, "அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதியபோது நமது நாடு பல்வேறு மதங்களை கொண்டது என்பதையும், அவற்றை ஏராளமான மக்கள் பின்பற்றுகின்றனர் என்பதையும் மனதில் வைத்துதான் எழுதினார். எனவேதான் இந்துஸ்தான் என்று அல்லாமல் பாரத் என்ற பெயர் சூட்டப்பட்டது. எனவே பகவத் அரசியலமைப்பு சாசனத்தை முதலில் படித்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும்" எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்