மைசூர் அரண்மனைக்குச் செல்லும் 30 அடி ஆழ சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

வியாழன், 17 ஜூலை 2014 (11:48 IST)
மைசூர் நகரில் அரண்மனைக்கு செல்வதாக கூறப்படும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
 
மைசூர் நகரில் நீலகிரி சாலை, சாமராஜா டபுள் ரோடு சந்திக்கும் இடத்தில் கடந்த வாரம் நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருந்தது. அது பூமிக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடைக்கான துவாரமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கருதினர். இதனால் அதை சரிசெய்வதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியை தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
 
அப்போது அங்கு பாதாள சாக்கடை இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாறாக, சதுர வடிவில் 30 அடி ஆழத்துக்கு பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கற்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஆச்சரியம் அடைந்த ஊழியர்கள், அருகில் தோண்டியபோது அங்கும் இதேபோன்று ஒரு பள்ளம் இருந்தது. அதில் 20 அடி தொலைவுக்கு கீழே இறங்கி பார்த்தால், மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுபற்றிய தகவல் அறிந்ததும், தொல்பொருள் ஆய்வு துறை ஆணையர் பெட்சூர் மட் மற்றும் அதிகாரிகள சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அது மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை தானா? என்பதை ஆராயும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதி முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
 
மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை என்று தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு கூடி விட்டனர். அவர்கள் ஆச்சரியத்துடன் அந்த சுரங்கப்பாதையை பார்த்து சென்றனர். அது அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை தான் என்றும், எதிரி படைகளை முறியடிப்பதற்காக அந்த சுரங்கப்பாதையை மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். என்றாலும், தொல்பொருள் ஆய்வு முடிவில் தான் அது அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதையா? என்பது தெரியவரும். ஏராளமானவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, அந்த சுரங்கப்பாதையை பார்த்ததால், அந்த பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்