சுங்க கட்டணம் ரத்து மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

வியாழன், 17 நவம்பர் 2016 (20:35 IST)
சுங்க கட்டணம் ரத்து நடவடிக்கையை வரும் 24ஆம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் சில்லறையாக மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.

100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படவில்லை.

மத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவது தற்காலிகமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலைமை சீரடையாததைத் தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்