நாடு முழுவதும் மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக வன்முறைகள் நிலவி வரும் மணிப்பூரின் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் தொகுதிகளுக்கும் சேர்த்து 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக மக்கள் புகார் அளித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு, கலவரம் நடந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
மணிப்பூரில் தேர்தல் நிறுத்தப்பட்ட 11 வாக்குச்சாவடிகளிலும் இன்று பலத்த பாதுகாப்புடன் மறுதேர்தல் தொடங்கியுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கலவர சம்பவங்களை தவிர்ப்பதற்காக வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வழிகளில் பலத்த பாதுகாப்புகள், சோதனைகள் செய்யப்பட்டு மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.