'மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு' - தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானது - வி.எஸ்.சம்பத்

வியாழன், 8 மே 2014 (19:51 IST)
வாரணாசியில் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நடவடிக்கைதான் என்று தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 'தேர்தல் ஆணையம் எந்தக் கட்சிக்கும் பயந்து செயல்படவில்லை எனவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு தேசியக் கட்சி போராட்டம் நடத்துவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.
வாரணாசியில் நடைபெறுவதாக இருந்த மோடியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்த தேர்தல் ஆணையம், அந்தக் கூட்டத்தை மாற்று இடத்தில் நடத்திக்கொள்ள அறிவுறுத்தியது. இதனையடுத்து நேற்று (புதன்கிழமை) பாஜக சார்பில் வாரணாசி தேர்தல் அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டது.
 
இதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து, வாரணாசியில் உள்ள லங்கா கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தால் வாரணாசி முழுவதும் பதற்றம் நிலவியது.
 
வாரணாசியில் தனது பிரச்சாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை மறந்துவிட்டதாகவும், கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாற்றினார்.

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
"தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கட்சிகள் போராட்டம் நடத்துவது வருத்தம் அளிக்கிறது. வாரணாசியில் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல் சரியானதுதான். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து பல அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஆணையத்துக்கு எதிராக தேசியக் கட்சி ஒன்று போராட்டம் நடத்தியது ஏமாற்றமளிக்கிறது.
 
விமர்சனங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், முதிர்ச்சியுடன் அதனை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் எந்தக் கட்சிக்கும் பயந்து செயல்படவில்லை. யாருக்காகவும் எங்கள் கடமையிலிருந்து தவறிவிடவில்லை.
 
வாரணாசியில் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பாதுகாப்பு தரப்பிலான ஆலோசனையின் பெயரில்தானே தவிர, அவரது கூட்டத்தைத் தடுக்கும் நோக்கத்தில் இல்லை. பாதுகாப்பு நோக்கத்தில் சில அறிவுரைகள் ஆணையத்திற்கு வந்தால், அதனை ஏற்றுச் செயல்படுவது இயல்புதான். இது முற்றிலும் பாதுக்காப்பை மனதில் வைத்து இயற்றப்பட்ட தடை" என்று வி.எஸ்.சம்பத் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்