உங்க குழந்தைகள் விஞ்ஞானி ஆக ஆசையா? இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்! – உடனே அப்ளை பண்ணுங்க!

Prasanth Karthick

திங்கள், 19 பிப்ரவரி 2024 (09:19 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் அறிவை மேம்படுத்தும் விதமாக இளம் விஞ்ஞானிகள் என்ற திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.



இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலக நாடுகளில் முக்கியமான விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்று. செவ்வாய், சந்திரன், சூரியன் என கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ள இஸ்ரோ அடுத்த கட்டமாக மனிதர்களையே விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.

மாணவர்களுக்கு விண்வெளி அறிவை ஏற்படுத்தவும், விண்வெளி சார்ந்த அவர்களது ஆர்வத்தை ஊக்குவிக்கவும் இஸ்ரோ “இளம் விஞ்ஞானிகள்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த திட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து 1.25 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

ALSO READ: 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுதான் இரண்டாவது முறை… சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!

இந்த வகுப்புகளில் சேர விரும்பும் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2 வார கால வகுப்புகளில் மாணவர்களுக்கு அறிவியல் விரிவுரைகள், ரோபோடிக்ஸ் சவால்கள், செயற்கைக்கோள் வடிவமைப்பு உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படும். விண்வெளி விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடலும் நடைபெறும்.

இந்த இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடங்கி மார்ச் 20 வரை நடைபெறுகிறது. இதில் இணைய விரும்பும் மாணவர்கள் https://jigyasa.iirs.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்