மட்டையால் அடித்து பல் மருத்துவர் படுகொலை : டெல்லியில் பரபரப்பு

வெள்ளி, 25 மார்ச் 2016 (18:10 IST)
பல் மருத்துவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்த கும்பல், அவரை மட்டையால் அடித்தே கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேற்கு டெல்லியின் விகாஸ்புரியில் வசிப்பவர் பங்கஜ் நரங்(40). இவர் ஒரு பல் மருத்துவர். நேற்று இரவு வீட்டிலிருந்த அவரை ஒரு கும்பல் தரதரவென்று வெளியே இழுத்து வந்து ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கியது. பலத்த காயமடைந்த பங்கஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
 
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் இந்தியா- பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, பங்கஜ் தன்னுடைய எட்டு வயது மகன் மற்றும் உறவுக்கார சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
 
அப்போது, அவர் அடித்த பந்து சாலைக்கு சென்றுள்ளது. பந்தை எடுக்க, அவரின் மகன் சென்றுள்ளான். அப்போது, அந்த வழியாக, சில சிறுவர்கள் வேகமாக ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள், அவரின் மகன் மீது மோதியது. 
 
இதனால் கோபமடைந்த பங்கஜ் நசீர் மற்றும் மற்ற சிறுவர்களுடன் சண்டை போட்டுள்ளார். அங்கு வந்த நசீரின் தாய்க்கும் அவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பங்கஜ் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிட்டார்.
 
அந்த கோபத்தில்தான், நசீர் மற்றும் மற்ற சிறுவர்கள் கும்பலாக வந்து பங்கஜை மட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இழுத்ததில் அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதையும் பொருட்படுத்தாமல் அவரை மட்டையால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
 
இந்த தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும், பங்கஜ் குடியிருக்கும் வீட்டின் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதுவரை நசீர் உட்பட  5 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
 
நசீர் மற்றும் அவனுடைய நண்பர்கள் ஏற்கனவே வேகமாக வண்டியை ஓட்டி, ஒரு குழந்தையின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்