பல்கலைக் கழகங்களில் நேரில் ஆய்வு செய்ய பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சனி, 20 செப்டம்பர் 2014 (12:05 IST)
தரமற்ற நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 41 பல்கலைக் கழகங்களில், பல்கலைக்கழக மானியக்குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள 127 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி விப்லப் சர்மா என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி.என்.தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண்டது. நாடு முழுவதும் 122 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த தாண்டன் குழு, அவற்றை மூன்று பிரிவுகளாக பிரித்தது.
 
இதில், கடைசி பிரிவில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்தது. இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் உள்ள சில கல்வி நிறுவனங்களும் அடங்கும்.
 
இதில் ஒரு பல்கலைக்கழகம் தனது பெயரை ‘உயர்கல்வி சிறப்பு மையம்’ என்று மாற்றிக் கொண்டது. இரண்டு பல்கலைக் கழகங்கள் தங்களுடைய நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை அரசாங்கத்திடம் மீண்டும் திரும்ப ஒப்படைத்து விட்டன.
 
எஞ்சியுள்ள 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
சர்ச்சைக்குரிய 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் விரிவாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் சார்பில் கூறப்பட்டது.
 
இந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். காணொலிக் காட்சி வழியாக ஆய்வு செய்வது தேவையான விளக்கத்தை தராது என்றும், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வருகிற 23 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்