கடன் தொல்லை: கர்நாடகாவில் ஒரே நாளில் 5 விவசாயிகள் தற்கொலை

ஞாயிறு, 19 ஜூலை 2015 (11:06 IST)
கர்நாடகாவில் கடன் தொல்லை காரணமாக ஒரே நாளில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
 
கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம் நந்திஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலப்பா. அவருக்கு வயத55. விவசாயியான இவர் தனது நிலத்தின் பேரில் ரூ.4.5 லட்சம் ரூபாய், கடன் வாங்கி விவசாயம் செய்தார்.
 
இவருடைய விவசாயத்தில் வழக்கம்போல நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை.
 
இதனால் மனம் உடைந்த ஆலப்பா தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதேபோல, குப்பி தாலுகா கோணிமாதேனுஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேதமூர்த்தியும் கடன் தொல்லை தாங்காமல் நேற்று ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இந்நிலையில், அதே மாவட்டம் சிரா தாலுகா கசபா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்ற 53 வயதுடைய விவசாயியும் தனது விவசாயத்திற்காக வாங்கிய ரூ.5 லட்சம் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா ராஜூப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்ரெட்டி (48). விவசாயி. இவரும் தனது விவசாயத்திற்காக வாங்கிய ரூ.1.80 லட்சம் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாணிக்ரெட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பன்னங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் உச்சேகவுடா. விவசாயியான இவரும் கடன் தொல்லை தாங்காமல் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
கடன் தொல்லையால் கர்நாடகாவில், விவசாயிகள் தற்கொலை செய்யும் துயர சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா நேற்று காலை வானொலி மூலம் உரையாற்றினார்.
 
அப்போது கூறிய சித்தராமையா, "மாநிலத்தில் உள்ள விவசாய பெரு மக்களே! நீங்கள் எக்காரணத்தை கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது.
 
எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு உங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டாலும், அதனை அரசுக்கு தெரியப்படுத்துங்கள்.
 
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. ஒவ்வொரு விவசாயியும் மன தைரியத்துடன் வாழ்கிறேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
நானும் ஒரு விவசாயியின் மகன்தான். எனக்கும் விவசாயம் செய்வதால் ஏற்படும் கஷ்டங்கள், சிரமங்கள் பற்றி நன்கு தெரியும். விவசாயிகள் தற்கொலை செய்வது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன். விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டாம் என்றும், கந்துவட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு வானொலி மூலம் முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்