மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் - மத்திய அரசு கருத்தால் அதிர்ச்சி

திங்கள், 14 மே 2018 (14:06 IST)
காவிரி நீர் விவகாரத்தில் மாநிலங்களில் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும் என மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி நீருக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. 
 
சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வரைவுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், இது மேலாண்மை வாரியம் இல்லை. 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இதில், கர்நாடகா, தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். மத்திய அரசு அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். இந்த அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானது என யு.பி.சிங் தெரிவித்தார்.இதிலிருந்து, உச்ச நீதிமன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்பது தெளிவானது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு யு.பி. சிங் அளித்த பேட்டியில், மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும். மத்திய அரசு அமைத்துள்ள அமைப்பானது மேற்பார்வையிடும் பணியை மட்டுமே செய்யும் என அவர் கூறினார்.
 
எனவே, மத்திய அரசு அதிகாரமில்லாத ஒரு மேற்பார்வை குழுவைத்தான் அமைத்திருக்கிறது என்பது அம்பலமாகியுள்ளது.  அணைகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் மூலதனம். அப்படியிருக்க அந்த நிலையே தொடரும் என யு.பி.சிங் கூறியிருப்பது, தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
 
அமைக்கப்பட்டுள்ள அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானது எனக் கூறிவிட்டு, அதிகாரமில்லாத ஒரு மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது நயவஞ்சக மோசடி செயல். இதனால் ஏற்கனவே இருந்த பழைய நிலைமையே தொடரும். ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என விடுதலை சிறுத்தை திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும், இது தொடர்பாக தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என விவாதிக்க தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்