ஏழைகளுக்கு உதவாத மத்திய பட்ஜெட்: காங்கிரஸ் கடும் கண்டனம்

வியாழன், 10 ஜூலை 2014 (17:22 IST)
நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முதல் பொது பட்ஜெட் ஏழை விரோத பட்ஜெட் என்றும், ஏமாற்றம் அளிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
பட்ஜெட் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், “ஒருபுறம் முந்தைய அரசின் வரிக் கொள்கைகளின்படி வரி வசூல் நடவடிக்கையை தொடர்வதாக கூறிவிட்டு, அழுத்தம் காரணமாக பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி வழங்கியிருக்கிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத்திட்டம் போன்ற எந்த நலத்திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. அதிக பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மனிதனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிவிலக்கு உதவாது” என்றார்.
 
ஏழைகளுக்கு ஆதரவான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவரான கேப்டன் அமரீந்தர் சிங்கும் குற்றம்சாற்றினார்.
 
இது கார்ப்பரேட் பட்ஜெட் என்று வர்ணித்துள்ள முன்னாள் வேளாண் அமைச்சர் சரத் பவார், இதற்கு விதிவிலக்காக எதுவும் இல்லை என்றும் விலைவாசி உயர்வின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள சாதாரண மனிதனுக்கு உதவாது என்றும் குறிப்பிட்டார். வரிவிலக்கு வரம்பு ரூ.50 ஆயிரம் உயர்த்தியிருப்பதும் சாதாரண மனிதனுக்கு உதவாது. மறைமுக வரிகள் உயர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்றும் அவர் கூறினார்.
 
அதேசமயம் முன்னாள் படைவீரர்களுக்கான ‘ஒன் ரேங் ஒன் பென்ஷன்’ திட்டம் மற்றும் அமிர்தசரசுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கும் திட்டத்தை பவார் பாராட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்