பணம் எடுக்க அவதிக்குள்ளாகி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுத்த மோடி அரசு

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (17:45 IST)
பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிற்கு பிறகு, வங்கியில் பணம் மாற்றுவதில் மற்றும் எடுப்பதில் ஏற்பட்ட சிரமத்தால் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த மோடி அரசு மறுத்துவிட்டது.


 

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய ஜனங்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்தது, பணம் மாற்ற இயலாமல் தற்கொலை செய்துகொண்டது உள்ளிட்ட பல காரணங்களினால் நூற்றக்கும் மேற்பட்ட எளிய ஜனங்கள் உயிரிழந்தனர். இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இன்று மக்களவை கூடியதும், 1894ஆம் ஆண்டு இதே தினத்தில் போபால் விஷவாயு தாக்கியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை ஒட்டி, 32ஆவது நினைவு தினத்தை, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, மக்களவைக்கான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிற்கு பிறகு, வங்கியில் பணம் மாற்றுவதில் ஏற்பட்ட சிரமத்தால் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை மக்களவை சபாநாயகர் பிரமோத் மகாஜன் நிராகரித்து விட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்