பயணியுடன் தகராறு: ஓடும் பஸ்சில் இருந்து ஆற்றில் குதித்த கண்டக்டர்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:19 IST)
மங்களூரில் பெண் பயணியுடன் ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனர் ஆற்றில் குதித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
கர்நாடகா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று மங்களூரில் இருந்து சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றது. பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் டிக்கெட் கொடுத்துவிட்டு மீதி பணத்தை பின்னர் தருவதாக நடத்துனர் கூறியுள்ளார். 
 
சிறிது நேரம் கழித்து அந்த பயணி கண்டக்டரிடம் சில்லரை கேட்டுள்ளார். இவர் 100 ரூபாய்க்கு மீதம் சில்லரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் நான் 500 ரூபாய் கொடுத்தேன் எனக்கு மீதி பணத்தை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
 
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நடத்துனர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டி செல்ல உத்தரவிட்டார். அதன்படி காவல் நிலையத்திற்கு சென்றவுடன், காவல்துறையினர் விசாரணை செய்து இறுதியில் அந்த பெண்ணிடம் 500 ரூபாய்க்கு மீதம் சில்லரை கொடுங்கள் என்று கூறினார்கள்.
 
இதையடுத்து அந்த பெண் பேருந்தை விட்டு இறங்கிவிட்டார். தொடர்ந்து பேருந்து சென்றது. அப்போது குமாரதாரா ஆற்று பாலத்தில் பேருந்து சென்றபோது, நடத்துனர் திடீரென்று ஆற்றில் குதித்தார்.
 
ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் சிலர் காப்பாற்ற முயன்றும், அவரை ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
நடத்துனர் தனது டிரிப் சீட்டில், அவமானப்படுவதை விட சாவதே மேல், என்று எழுதி வைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் இவர் சிறந்த நடத்துனர் என்ற விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்