குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியல்: இரண்டாவது இடத்தில் இந்தியா

சனி, 13 செப்டம்பர் 2014 (11:33 IST)
உலகிலேயே அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நலனுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெஃப், அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்விக்கப்பட்டுள்ளது.

2005 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 43 சதவீதத்தினருக்கு, 18 வயது பூர்த்தியாவற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களைவிட, படிப்பறிவு இல்லாத சிறுமிகள் திருமணம் செய்விக்கப்படுவது 5.5 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆண் குழந்தைகளைவிட விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

4 வயது வரை உள்ள குழந்தைகளில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் என்ற அளவிலேயே ஆண் - பெண் விகிதாசாரம் உள்ளது.

உலகில் பிறப்பு பதிவு செய்யப்படாத ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் கொண்ட நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது.

கடந்த 2000ல் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் பிறந்த 7.1 கோடி குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் பெறப்படவில்லை. குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில் மதம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் 39 சதவீதமும், ஹிந்துக்களில் 40 சதவீதமும், ஜெயின் மதத்தினரில் 87 சதவீதமும் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் ஒரு வயதுக்குட்பட்ட 68.6 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படவில்லை“ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்