வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! – மத்திய அரசு பதில்

வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:04 IST)
வங்கி கடன்களில் விதிக்கப்பட்ட வட்டிக்கு மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் முடங்கிய நிலையில் வங்கிகள் கடன் வாங்கி வட்டி கட்டாதவர்களுக்கு வட்டியின் மீது வட்டி விதித்துள்ளன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் பதில் அளித்த மத்திய அரசு “வங்கி கடன்களின் வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. எல்லா துறைகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை வலுவிலக்க செய்யும் வகையில் முடிவெடுக்க முடியாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் “வட்டிக்கு வட்டி விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனில் அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்